தேங்காய் உருண்டை

அரிசி 1டம்ளர்
தேங்காய் பூ… 2டம்ளர்
மண்டைவெல்லம் 100கிராம்
**
செய்முறை…
அரிசியை சிவக்க வறுத்துக்கங்க
மண்டைவெல்லத்தை பொடியாக்கி வைங்க ..
வறுத்த அரிசியை மிக்ஸிஜார்ல போட்டு பொடியாக்கிட்டு
துருவிய தேங்காயை போட்டு
மிக்ஸ் பண்ணுங்க..
கடைசி பொடித்து வைத்த வெல்லம் போட்டு கலக்கிக்கங்க
கிளறிவிட்டு கிளறிவிட்டு மிக்ஸி ஜார்ல போட்டு கலந்து வெச்சுட்டு பாத்ரத்ல கொட்டி சிறுசிறு உருண்டையாக்கி வெச்சிங்கன்னா… செம டேஸ்ட்
3நாள் வரை கெட்டு போகாது..
ஹெல்த்தி டேஸ்ட்டி.. குழந்தைகள் விரும்பி சாப்டுவாங்க…
(தண்ணீர் சேக்காதிங்க)

Image may contain: food and indoor
Advertisements
Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை

உருளைக்கிழங்கு – 1 கிலோ,
பச்சை மிளகாய் – 10, கறிவேப்பிலை,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
கடுகு – சிறிதளவு,
உளுந்து – 1 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய்- 3 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயப் பவுடர் – 1/2 மேசைக்கரண்டி,
கடலை மாவு – 250 கிராம்,
மிளகாய்த் தூள் – 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 மேசைக்கரண்டி,
தேங்காய் எண்ணெய் – 250 கிராம் (வறுக்க).
செய்முறை

உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும், தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயப் பவுடர் சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் வேகவைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடங்கள் வைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், உருளைக் கிழங்கு கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

தினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.

1. இளஞ்சூடான நீர் – காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும்.  மலச்சிக்கலைச் சரிசெய்யும்.

2. வெந்தயம் நீர் – வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

 

 

3. தேன் – இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.

4. காய்கறிகள் – கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.

5. அரிசிக்கஞ்சி – குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்சி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

6. பழங்கள் – வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.

 

7. முளைக்கட்டிய பயறு – முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

8. உளுந்தங்களி – பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.

Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள் …
கறிவேப்பிலை சிறிது காய வெச்சுக்கங்க
2 நாள் காய்ந்தால் போதும்
சிறிதளவு மிளகு…
பெருங்காயம் சிறிதளவு
உப்பு….
••
மேலலே சொன்ன எல்லா பொருட்களையும் தனிதனியே வறுத்து ஆற வெச்சுக்கங்க
அப்றமா மிக்சிஜார்ல போட்டு நைசா திரிச்சுக்கணும் ….
சூடான சாதத்ல இத போட்டு நெய் ஊற்றி சாப்ட்டா………ம் செம்மயா இருக்கும்
பேச்சுலர்ஸ்க்கு உகந்த ரெசிபி.
அப்றமா ரொம்ப ரொம்ப நல்லது வயிற்றுப்புண் அல்சர்க்காரங்களுக்கு….
அப்றமா…….. டெலிவரியான இளம்பெண்களுக்கும் ரொம்ப ரொம்ப நல்ல மருந்து…

Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

மாலை ஸ்நாக்ஸ் சத்தான ரெசிப்பிகள்

சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)

தேவையானவை: இட்லி அரிசி  – 1/4 கிலோ, சாமை – 150 கிராம், குதிரைவாலி – 100 கிராம், உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1,  கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த் தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து  ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். குழிப்பணியாரம் செய்யும் தட்டில் மாவை ஊற்றி, வார்த்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி  ஆகியவை ஒன்று சேர்வதால் இந்தப் பணியாரத்தைச் சாப்பிடும்போது, உடல் மந்தத்தன்மை அடையாது.உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். முழுக்க ஆவியிலும் வேகாமல், எண்ணெயிலும் பொரிக்கப்படாமால் செய்யப்படுவதால், சத்துக்கள் சிதையாமல் உடலுக்குக் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பணியாரம் மிகவும் பிடிக்கும். தேவைப்பட்டால், காரச்சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.

வெஜிடபிள் ஆம்லெட்

தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், முழு கோதுமை – தலா 50 கிராம், பச்சைமிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச்சோளம், கோதுமை  ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து, ரவை போல அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன், நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக்கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்: கடலைப்  பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்  பருப்பு, முந்திரி   அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச்சோளம், முழு கோதுமை போன்றவற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது. பச்சைமிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன்றவற்றில் இருந்து நுண் ஊட்டச்சத்துக்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.

திரிகடுகம் காபி

தேவையானவை: மிளகு – 30 கிராம், சுக்கு – 50 கிராம், திப்பிலி – 5 கிராம், கருப்பட்டி, காபி தூள் – தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் கருப்பட்டியைக் கரைத்து, அதனுடன் காபி தூள், திரிகடுகம் தூள் கலந்து கொதிக்கவைத்து சூடாகப் பருகலாம்.

பலன்கள்: சித்த மருத்துவத்தில் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ எனச் சொல்வார்கள். சுக்கை தோல் சீவித்தான் பயன்படுத்த வேண்டும். மிளகு, பசியைத் தூண்டும்; பித்தத்தைச் சமப்படுத்தும்; உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும். திப்பிலி, கோழையைப் போக்கும். சளிப் பிரச்னைகள் நீக்கி, உடலை உற்சாகம் அடையச் செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக்காலத்தில் காலை – மாலை இந்த காபி குடித்துவருவது மிகவும் நல்லது.

பச்சைப் பயறு கட்லட்

தேவையானவை: பச்சைப் பயறு – 1/4 கிலோ, கேரட், பீன்ஸ் – தலா 50 கிராம், மஞ்சள் தூள் – சிறிதளவு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) – சிறிதளவு, வெங்காயம் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான  அளவு, காய்ந்த பிரெட் தூள் – சிறிதளவு.

செய்முறை: பச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி,  வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.

பலன்கள்: மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. நரை, பிணி, மூப்பு போன்றவற்றைத் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன. வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.

Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

சிறுதானிய ஸ்நாக்ஸ்

இன்றைய குழந்தைகள் சாப்பாட்டைவிட ஸ்நாக்ஸைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லை என்று தெரிந்தும், பல பெற்றோரும் காற்று நிரப்பப்பட்ட பாக்கெட் ஸ்நாக்ஸ்களை வாங்கிக் கொடுக்கின்றனர். வீட்டிலேயே குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில், ஸ்நாக்ஸ் செய்யலாம் என்றால், எப்படிச் செய்வது என்று தெரிவது இல்லை. சிறுதானியத்தை உணவாக மட்டும் இன்றி, ஸ்நாக்ஸாகவும் செய்து குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களின் ஆசையும் பூர்த்தி ஆகும். தேவையான ஊட்டச்சத்தும் சேரும். ரா.மாதேஷ்வரன் சிறுதானிய ஸ்நாக்ஸ்களைச் செய்துகாட்ட, அதன் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்தமருத்துவர் பாலசுப்பிரமணியன்.

கேழ்வரகு முறுக்கு

தேவையானவை: கேழ்வரகு மாவு  அரை கிலோ, அரிசி மாவு  50 கிராம், சீரகம்  சிறிதளவு, உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும், கேழ்வரகு மாவுடன், அரிசி மாவைச் சேர்த்து, உப்பு, மிளகாய்த் தூள், சீரகம் கலந்து, தண்ணீர் சேர்த்து, நல்ல பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, ஒரு வெள்ளைத் துணியில் முறுக்காகப் பிழிய வேண்டும். பிறகு, வெயிலில் காயவைத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அருமையான கேழ்வரகு முறுக்கு தயார்.

பலன்கள்: உடலுக்கு வலிமை தரும், உஷ்ணத்தைக் குறைக்கும். இளம் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கும்.

எள் உருண்டை

தேவையானவை: எள், நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, பச்சரிசி  50 கிராம்.

செய்முறை: பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்துக்கொள்ளவும். எள்ளை தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோல் நீங்க லேசாக இடித்து, வெயிலில் சிறிது நேரம் உலரவைக்கவும். பிறகு, பச்சரிசி, வெல்லம், எள் மூன்றையும் ஒன்றாக இடித்த பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும் (உரல் இருந்தால் அதில் போட்டு இடிக்கலாம். சுவை கூடுதலாக இருக்கும்). இந்தக் கலவையை எலுமிச்சம் பழ அளவில் உருண்டையாகப் பிடித்துவைக்கவும்.

பலன்கள்: வெல்லம், எள்ளில் இரும்புச் சத்து அதிகம். ரத்த சோகை வராமல் தடுக்கும். இளைத்து இருப்பவர்கள் எள் சாப்பிட்டால், உடல் நலம் நன்றாகத் தேறும். தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம்.

கேழ்வரகுத் தட்டுவடை

தேவையானவை: கேழ்வரகு  அரை கிலோ, வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு  தலா 50 கிராம், உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ளவும். இந்த மாவுடன் வறுத்த உளுந்து சேர்த்து, நன்றாக அரைக்கவும். இதில் உப்பு, மிளகாய்த் தூள், கடலைப் பருப்பைச் சேர்த்து, நன்றாகக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். சிறிய அளவில் உருண்டையாக உருட்டி, வாழை இலையில் போட்டு, மெல்லியதாகத் தட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயை மிதமான சூட்டில் காயவைத்து, ஒவ்வொன்றாகப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

பலன்கள்:  கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. உடல் எடையைக் கட்டுக்குள்வைக்கும். குடலுக்கு வலிமை தரும். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும்.

கம்பு உருண்டை

தேவையானவை: நாட்டு கம்பு, நாட்டு வெல்லம்  தலா அரை கிலோ, வறுத்த வேர்க்கடலை  50 கிராம்.

செய்முறை: கம்பை நன்றாக இடித்துக்கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையைச் சிறு துண்டுகளாக உடையும் அளவுக்கு இடித்துக்கொள்ளவும்.  வெல்லத்துடன் தண்ணீரைச் சேர்த்து, கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சிக்கொள்ளவும். கம்பு மாவையும், உடைத்த வேர்க்கடலையையும் ஒன்றாகக் கலந்து, வெல்லப்பாகினை சேர்த்து, எலுமிச்சம்பழம் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: வெல்லப்பாகை, கம்பு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்க்க வேண்டும். ஏனெனில், வெல்லப்பாகின் சூடு குறைந்தால், உருண்டை பிடிக்க வராது. வெல்லப்பாகினை அடுப்பில் லேசாகச் சூடு செய்துகொண்டே, சிறிது சிறிதாகச் சேர்த்து, உருண்டை பிடிக்க வேண்டும்.

பலன்கள்: புரதச்சத்து நிறைந்தது. பீட்டாகரோட்டின் அதிகம் உள்ளதால், பார்வைத் திறன் மேம்படும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.  உடல் சூட்டைத் தணிக்கும். சருமத்தைப் பொலிவாக்கும்.

வரகு அரிசி சீவல்

தேவையானவை: வரகு அரிசி மாவு  ஒரு கிலோ, கடலை மாவு  100 கிராம், உப்பு, மிளகாய்த் தூள்,எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இந்த மாவுடன் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசையவும். பிறகு, இந்த சீவல் போடும் பெரிய அளவிலான ஓட்டை உடைய கரண்டியில் மாவைவைத்து, கைகளால் தேய்த்துக் காயும் எண்ணெயில் போட்டு, பொன் நிறமாக எடுக்கவும்.  காரம் தேவைப்பட்டால், பொரித்த சீவலின் மேல், மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.

பலன்கள்: கோதுமையைவிட இதில் நார்ச்சத்து அதிகம். தானியங்களுடன் ஒப்பிடுகையில், இது அதிகச் சத்துக்கள் நிறைந்தது. மாவுச்சத்தும் குறைவாகக் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. எளிதில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு அரிசி அதிரசம்

தேவையானவை:  வரகு அரிசி  ஒரு கிலோ, நாட்டு வெல்லம்  முக்கால் கிலோ, எண்ணெய்  தேவையான அளவு.

செய்முறை: வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடையால் சலித்துக்கொள்ளவும். நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். (வெல்லப்பாகினை பாத்திரத்தில் விட்டால் நகராத அளவுக்கு கெட்டி பதம்). வெல்லப்பாகினை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, வரகு அரிசி மாவினை சேர்த்துச் சற்று கெட்டிப் பதத்தில் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். (தட்டி எண்ணெயில் போடும் அளவுக்கு) இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரிக்கவும். அதிரசம் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும்.

பலன்கள்: எளிதில் செரிமானம் ஆகும். மாவுச்சத்துக் குறைவாக இருப்பதால், அதிக எடை இருப்பவர்களும் சாப்பிடலாம்.

Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment

மோர் குழம்பு

சிம்பிளான… மோர் குழம்பு

மோர் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. அத்தகைய மோரை சாதாரணமாக குடிப்பது போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அதனை குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும்.
இங்கு மோர் குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மோர் – 1 கப்
தேங்காய் – 1/2 கப்
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வரமிளகாய் – 1
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லித், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
பின் மிதமான தீயில் அதனை 3 நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

TAMIL History's photo.
Posted in படித்ததில் பிடித்தது | Leave a comment