30 வகை பூரி

சாப்பாட்டுக்கு ‘டிமிக்கி’ கொடுக்கும் குழந்தைகள்கூட, ‘இன்னிக்கி பூரி பண்ணப் போறேன்’ என்று சொன்னால்,  ‘ரெடியா?’ என்று உடனே பரபரப்பார்கள்.

அப்படி குட்டீஸ் முதல், சீனியர் சிட்டிசன்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும் 30 வகை பூரி ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல்கலை நிபுணர் பாரதி முரளி, ”எண்ணெய் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதால், பூரி வகைகளை அளவோடு செய்து கொடுத்து ஆரோக்கியத்தோடு வாழுங்கள்” என்று வாழ்த்துகிறார்.

அத்தனை பூரியையும் அழகு மிளிர அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை, ரவை – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை – சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.

பேல் பூரி

தேவையானவை: அரிசிப் பொரி – 3 கப், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், தக்காளி – தலா கால் கப், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை, ஓமப் பொடி, வேக வைத்த உருளைக்கிழங்கு துண்டுகள் – தலா கால் கப், சாட் மசாலா – கால் டீஸ்பூன்.

கார சட்னிக்கு: கொத்தமல்லி, புதினா – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, உப்பு – தேவையான அளவு.

ஸ்வீட் சட்னிக்கு: புளி – 50 கிராம், வெல்லம் – கால் கப், பேரீச்சம்பழம் – சிறிதளவு, சீரகத்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால்… கார சட்னி தயார். வெல்லத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். ஊற வைத்த புளியைக் கெட்டியாக கரைத்து வடிகட்டவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதை புளி – வெல்லக் கரைசலில் விட்டு கொதிக்க வைத்து… மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கினால்… ஸ்வீட் சட்னி ரெடி.

வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசிப் பொரி, வெங்காயம், கேரட், தக்காளி, வறுத்த வேர்க்கடலை, வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகள், சாட் மசாலா சேர்த்துக் கொள்ளவும். ஸ்வீட் சட்னி, கார சட்னியை கலந்து… அதன்மேல் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பானி பூரி

தேவையானவை: ரவை – அரை கப் மைதா – அரை டீஸ்பூன், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, சோடா உப்பு, சர்க்கரை, உப்பு அனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டவும்.

அவற்றை சிறு பூரிகளாக இட்டு பொரிக்கவும். பூரியின் நடுவில் ஓட்டை போட்டு உருளைக்கிழங்கு மசாலா, ஸ்வீட் சட்னி, கார சட்னி ஊற்றி பரிமாறவும்.

ரவா பூரி

தேவையானவை: மைதா, மெல்லிய ரவை – தலா ஒரு கப், நெய் – கால் கப், பால் – அரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ரவை, மைதா, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு நெய்யை உருக்கி, மாவில் சிறிது சிறிதாக ஊற்றி பிரெட் தூள் போல செய்து, பாலை விட்டு கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). 15 நிமிடம் ஊறிய பின் சிறிது கனமான பூரியாக இட்டு, பொரிக்கவும். இந்த பூரி மிகவும் கரகரப்பாக இருக்கும்.

தக்காளி பூரி

தேவையானவை: மைதா – ஒரு கப், கோதுமை மாவு – ஒன்றரை கப், தக்காளி – 2, சீரகத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, சீரகத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு  வடிகட்டி… சிறிதளவு மைதா மாவை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதி மைதா மற்றும் கோதுமை மாவை கலந்து பிசைந்து கொள்ளவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தனியே எடுத்து வைத்திருக்கும் மைதா மாவில் புரட்டி, சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஷாஹி பட்டூரா

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், மைதா மாவு – அரை கப், சர்க்கரை – 2 டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், ஈஸ்ட்,

ஓமம் – தலா ஒரு டீஸ்பூன், மோர் – ஒன்றரை கப், சூடான பால் – அரை கப், ஸ்பிரிங் ஆனியன் – ஒன்று, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: முதலில் ஈஸ்ட்டை இளம் சூடான பாலில் போட்டு பொங்கி வரும் வரை வைக்கவும். பின் இந்த கரைசலுடன் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, ஓமம், நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியன், மோர், உப்பு சேர்த்துப் பிசையவும். சிறிது நேரம் ஊற வைத்தால் பொங்கி வரும். பின்னர் மாவை எடுத்து சற்று கனமாக பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

தேங்காய் பூரண பூரி

தேவையானவை: கோதுமை மாவு (அல்லது) மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – அரை கப், ரவை – கால் கப், தேங்காய் துருவல் – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை: தேங்காய் துருவல், ரவை, சர்க்கரை மூன்றையும் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். கோதுமை மாவு (அல்லது) மைதா மாவை ஒரு சிட்டிகை உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். உருண்டையை எடுத்து குழி போல் செய்து, அதில் தேங்காய் கலவையில் சிறிது வைத்து மூடி, மெல்லிய பூரியாக இட்டு, எண்ணெயில்  பொரிக்கவும்.

குறிப்பு: தேவையானால், பொடித்த சர்க்கரையை மேலே தூவி பரிமாறலாம்.

ஸ்டஃப்டு வெஜ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், நெய் – 2 ஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

மசாலாவுக்கு:  வெங்காயம், தக்காளி, வேக வைத்த உருளைக்கிழங்கு – தலா ஒன்று , கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து… கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்து நன்கு கிளறவும். பிறகு நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். கோதுமை மாவு, மைதா மாவு, நெய், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவை பூரிகளாக தேய்க்கவும் ஒரு பூரியில் மசாலாவை வைத்து, மற்றொரு பூரியை மேலே வைத்து, தண்ணீரால் தொட்டு மூடவும். பிறகு காயும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

பசலைக்கீரை பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், பசலைக்கீரை – 2 கட்டு, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள், சர்க்கரை – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, ஆறிய பிறகு விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,   மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும்  சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான மாவாக பிசைய வும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

சோம்பு பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், ரவை – 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒன்றரை கப் தண்ணீரை சுடவைத்து அதில் சோம்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற விடவும். கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சர்க்கரை, உப்பு, நெய் சேர்த்துக் கலந்து, அதில் சோம்பு, வேக வைத்த தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசையவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், சர்க்கரை – அரை டீஸ்பூன், தயிர் – கால் கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சர்க்கரை, உப்பு, தயிர், சீரகம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசையவும் (தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை சிறிது நேரம் ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

காரப் பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 3 கப், ரவை, கடலை மாவு – தலா 2 டீஸ்பூன், ஓமம் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, ரவை, கடலை மாவு, ஓமம், மிளகாய்தூள், உப்பு, நெய் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மசாலா சீஸ் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு – தலா ஒரு கப், உருளைக்கிழங்கு, வெங்காயம் – தலா 2, பச்சை மிளகாய் – 3, எலுமிச்சைச் சாறு – ஒன்றரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், சீஸ் – ஒரு துண்டு (துருவிக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை, இஞ்சி – சிறிய துண்டு, நெய் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் (அல்லது துருவிக் கொள்ளவும்). இஞ்சி – பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். வெங்காயம், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். கோதுமை மாவு, மைதாவுடன் துருவிய சீஸ், வதக்கிய வெங்காயம் – இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, நெய், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பிரெட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு – 3 கப், பிரெட் – 8 ஸ்லைஸ், புளிப்பான கெட்டித் தயிர் – அரை கப், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவு,  உப்பு, பேக்கிங் பவுடர்  ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து மூன்று முறை சலிக்கவும்.  பிரெட்டின் ஓரத்தை எடுத்துவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணீரில் தோய்த்து உடனே பிழிந்து எடுத்து கையால் நன்றாக மசிக்கவும். இதனுடன் சலித்த மாவு, தயிர் சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). இதை 2 மணி நேரம் ஊற வைத்து பெரிய உருண்டைகளாக செய்து, மைதா மாவில் புரட்டி, சற்று பெரிய பூரி போல் இடவும். பிறகு எண்ணெயில் பொரிக்கவும்.

புதினா  கொத்தமல்லி பூரி

தேவையானவை: கோதுமை மாவு – ஒரு கப், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, புதினா – தலா அரை கப், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, பச்சை மிளகாய் விழுது, நறுக்கிய புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

வடப்பி

தேவையானவை: சோள மாவு – இரண்டரை கப், கோதுமை மாவு – ஒரு கப், கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கைப்பிடி அளவு, அரிசி மாவு – அரை கப், புளிக்காத தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், உப்பு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – கால் கப் (மாவுக்கு), துருவிய வெள்ளரிப் பிஞ்சு – 2 கப், வெள்ளை எள் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பொரிப்பதற்கான எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்து பிசையவும். மாவை சற்று கனமான பூரிகளாக இட்டு,  எண்ணெயில் பொரிக்கவும்.

குறிப்பு: மாவை பிசைந்த உடனேயே பூரிகளாக இட்டு பொரித்துவிட வேண்டும்.

காலிஃப்ளவர் மசாலா பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன்,  சீரகத்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

மசாலா பூரணத்துக்கு: துருவிய காலிஃப்ளவர் – 2 கப், தேங்காய் துருவல், நறுக்கிய கொத்தமல்லி – தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழம் – ஒன்று, கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங் பவுடர், மிளகாய்த்தூள், சீரகத்தூள், நெய் ஆகியவற்றை தேவையான தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சிவக்க வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், உப்பு, காலிஃப்ளவர் சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வதங்கியவுடன் தேங்காய் துருவல், உப்பு, கொத்தமல்லி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்தால்… மசாலா பூரணம் தயார்.

பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நடுவில் மசலா பூரணம் வைத்து, பூரியாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

பாதாம் பூரி

தேவையானவை: மைதா மாவு – 2 கப், சர்க்கரை, பாதாம் – தலா ஒரு கப், குங்குமப்பூ – சிறிதளவு, ஏலக்காய் – 5, கேசரி பவுடர் – சிறிதளவு, பால் – கால் கப், எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: வெந்நீரில் பாதாமை போட்டு ஊற விடவும். பிறகு தோல் உரித்து அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையை பொடித்துக் கொள்ளவும். மைதா மாவில் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, கேசரி பவுடர், அரைத்த பாதாம், பொடித்த சர்க்கரை மற்றும் பால் சேர்த்துப் பிசையவும். மாவை உருண்டைகளாக்கி, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு,  சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை – தலா 2 கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெந்தயக் கீரை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

தக்காளி  சீஸ் பூரி

தேவையானவை: மைதா, கோதுமை மாவு, தக்காளி சாறு – தலா ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,  சீஸ் துருவல் – ஒரு கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், சீஸ் துருவல், உப்பு, தக்காளி சாறு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்). மாவை அரை மணி நேரம் ஊற வைத்து, பிறகு பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கேரட் பூரி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப், துருவிய கேரட் – அரை கப், பச்சை மிளகாய் – 2, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கேரட் துருவலை சிறிது நேரம் ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். ஆறியவுடன் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன் அரைத்த விழுதை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ஆலு பட்டூரா

தேவையானவை: மைதா மாவு  – 2 கப், உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உரித்து, மசித்தது) – ஒன்றரை கப், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு, சிறிது சிறிதாக மைதா மற்றும் உப்பையும் சேர்த்து மிருதுவான மாவாக பிசையவும். (தண்ணீர் சேர்க்க வேண்டும்). பிறகு மாவை உருண்டைகளாக்கி, மைதா மாவில் புரட்டி, சற்று கனமாக பூரிகளாக இடவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து ஒவ்வொன்றாக பொரிக்கவும்.

குறிப்பு: மாவைக் கலந்தபின் நீண்ட நேரம் வைக்காமல் உடனே பொரிக்கவும். இல்லைஎன்றால், மாவு தளர்ந்து விடும்.

தால் பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா மாவு, பாசிப்பருப்பு – தலா ஒரு கப், பச்சை மிளகாய் விழுது – 2 டீஸ்பூன், தனியாதூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிபருப்பை ஒரு பத்திரத்தில் வேக வைத்து (குக்கர் தேவையில்லை), தண்ணீர் இல்லாமல் வடித்து… உப்பு, பச்சை மிளகாய் விழுது, தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து ஒன்றிரண்டாக மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவு, மைதா மாவை சேர்த்துப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்). மாவை சற்று கனமாக பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

மத்ரி

தேவையானவை: மைதா – ஒரு கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சமையல் சோடா – 2 சிட்டிகை, ஓமம் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து தண்ணீர் விட்டு பிசையவும். 15 நிமிடம் ஊற விட்டு, உருண்டைகளாக உருட்டி,  சற்று கனமாக இடவும். பின் சிறு வட்ட மூடி (அ) கிண்ணத்தால் வெட்டி முள்கரண்டியால் குத்திவிட்டு, பின்னர் எண்ணெயில் பொரிக்கவும். இது ஒரு குஜராத்தி உணவு.

கேரட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு – 2 கப், மசித்த கேரட் விழுது – ஒரு கப், சமையல் சோடா – கால் டீஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: ஓரு பாத்திரத்தில் தயிர், சமையல் சோடா, உப்பு ஆகியவற்றைப் போட்டு கரைக்கவும். இதை மைதா மாவில் சேர்த்துப் பிசிறி, கேரட் விழுதை சேர்த்து நன்கு பிசையவும். இதை  ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து பொங்க விடவும். பிறகு மாவை கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

லுச்சி

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், ஓமம் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவில் உப்பு, ஓமம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். சிறிது ஊறியவுடன் பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும் இந்த வகை பூரி மேற்கு வங்காளத்தில் புகழ் பெற்ற உணவாகும். உருளைக்கிழங்கு சப்ஜி இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

இன்ஸ்டன்ட் பட்டூரா

தேவையானவை: மைதா மாவு – 3 கப், சாதா சோடா – ஒரு பாட்டில், சர்க்கரை – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: சோடாவில் உப்பையும் சர்க்கரையும் போட்டு நன்கு நுரைக்கும்படி கலக்கவும். பிறகு அதை மைதா மாவுடன் சேர்த்துப் பிசையவும். சிறிது ஊற வைத்து, சற்று கனமான பூரிகளாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும்.

மிளகு  சீரக பூரி

தேவையானவை: கோதுமை மாவு, மைதா – தலா முக்கால் கப், மிளகு, சீரகம் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மிளகையும், சீரகத்தையும் வாணலியில் சிறிது சூடு செய்து பொடித்துக் கொள்ளவும். மாவுகளை ஒன்றாக்கி,  உப்பு போட்டு கலந்து, அதில் மிளகு – சீரகப் பொடியை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறிது ஊற வைத்து, பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

ராகி பூரி

தேவையானவை: கேழ்வரகு மாவு – 2 கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், ரவை – ஒரு டீஸ்பூன்,  மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு  – தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில் ரவை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். அதனுடன் கேழ்வரகு மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தழை சேர்த்து, கெட்டியாக பிசையவும். மாவை பூரிகளாக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.

கசகசா பூரி

தேவையானவை: மைதா மாவு – 2 கப், நெய் – 5 டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

பூரணத்துக்கு: கசகசா (அரைத்த விழுது) – ஒரு கப், மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகம் – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சி விழுது – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவுடன் நெய், உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து கசகசா விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இஞ்சி விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். பூரணம் தயார்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பூரிகளாக இட்டு, பூரணத்தை நடுவில் வைத்து பரப்பி, ஓரத்தை சேர்த்து மூடி, பூரிகளாக தேய்க்கவும். பிறகு எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.

About Gobinath S

Completed B.E Electronics and Communication Engineering. Working in IT industry.
This entry was posted in படித்ததில் பிடித்தது. Bookmark the permalink.

Leave a comment